Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
அக்டோபர் 2008
ஆண்களின் சினிமா சில குறிப்புகள்
ஸ்டாலின் ராஜாங்கம்

தமிழ் சினிமாவின் பெண்கள் குறித்த மதிப்பற்ற பதிவுகளுக்கு எந்தெந்தப் படங்களைச் சான்றாகக் கொள்ளலாம் என்று யோசித்தபோது இதுவரை வெளியாகியுள்ள எல்லாப் படங்களையுமே கொள்ளமுடியும் என்று தோன்றியது. பெண் உமை உணர்வை ஒரு பக்கமாக நிறுத்தினால் அதற்கு நேர்எதிராகத் தமிழ் சினிமாவை நிறுத்தலாம். இவ்வகையில் தேசிய, திராவிட, இடதுசாரி வகையில் அமைந்த படங்களையும் விதிவிலக்காகச் சொல்ல முடியாது.

பெண்ணின் உடலைப் பண்டமாக மாற்றும் சினிமாவின் உடல்சார்ந்த பதிவுகள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் ஆபாசம் என்பது சித்தரிக்கும் தோற்றத்தில்தான் இருக்கவேண்டும் என்பதல்ல. முன்வைக்கப்படும் கருத்திலும் ஆபாசம் உண்டு. தமிழ் சினிமாவில் கருத்து ஆபாசம் அதிகம் உண்டு. பெண்ணை உயர்வாகச் சித்தப்பதாகக் கூறும் படங்கள், வழக்கமான ஆண்பார்வையில் பெண்ணுக்கு எதிரான கருத்தியல் வன்முறையை வெளிப்படையாகச் சொல் கிறது.

உடல், மனம் ஆகிய இரண்டின் மீதும் பெண் மீதான அதிகாரம் கட்டப்பட்டுள்ளது. குடும்ப அமைப்பிலிருந்தும், ஆணின் பிடியிலிருந்தும் விடுபட முடியாத பெண்களை கற்பு, பத்தினி போன்ற சொல்லாடல்கள் மூலம் சிந்தனையளவிலும் அடக்கி வைத்துள்ளனர். தமிழ் புராணங்களை மையப் படுத்திய நாடகங்களிலிருந்து பிறந்த தமிழ் சினிமாவில் கதைகளும் அப்படியே இடம் பெயர்ந்தன. ஆணை வழிபடும் பெண்கள், குடும்பக் கடமையையே உயிரென ஓம்பும் பெண்கள், தாசி வீட்டுக்குச் சென்று திரும்பும் ஆணுக்காகக் காத்திருக்கும்தியாகம் செய்யும் பெண்கள் இப் படங்களில் இடம்பெற்றனர். ஆனால் தொடக்க காலப்படங்களில் பெண்கள் நடிக்க முடியவில்லை. பொதுவெளிகளில் பங்கேற்கும் பெண்களின் நடவடிக்கைகள் பாலியல் ஒழுங்கின்மையோடு தான் அன்றைக்கும் பார்க்கப்பட்டன. நாடகமும், சினிமாவும் கூட பெண்களுக்கு மறுக்கப்பட்டது. பண்பாட்டையும், ஒழுக்கத்தையும் பெண்ணை மையப்படுத்தி மட்டுமே உருவாகவுள்ள ஆண் சமூகம் எந்தவொன்றினாலும் அவர்களை விடுபடாத வண்ணம் கண்காணித்தும் வந்தது.

1931 தொடங்கி 1960 வரையிலான படங்களின் கதைகள் புராணக் கதைகளையே கச்சாப் பொருளாக்கிக் கொண்டன. பெண்ணாகப் பிறந்தாலே துன்பம்தான், அதனை ஏற்பதே கதியென்று துன்பத்தை ஏற்று ‘ஆறுதலையடையும்' பெண்கள் என்று பலவகையான கதைகள் படங்களாயின. இப்படங்களின் அம்சங்கள்தான் இன்றுவரையிலும் நம் சினிமாவில் ஆளுமை புரிகின்றன. பெண்ணடிமைக் கருத்துக்களைச் சொல்லுவதிலும், பரப்புவதிலும் புராணங்கள் வகித்துவந்த இடத்தினை நவீனகாலத்தில் சினிமா எடுத்துக் கொண்டு விட்டது.

சினிமா, நாடகம், பட்டிமன்றம் ஆகியவற்றில் பெண்ணுக்குப் பெண்ணே எதிரி எனும் கருத்தமைவு தொடர்ந்து சொல்லப்படுகிறது. பெண்ணின் சமூக வெளிக்கான சாவியைத் தன்னிடம் வைத்துக் கொண்டு, வீட்டை மட்டும் அவளுக்கான பகுதியாக்கி உலவ விடுகிறான். வீடு எனும் எல்லைக்குள் ஆட்டுவிப்பவளைப்போல அவள் செயற்பட்டாலும் அவளுக்காக எதையும் செய்து கொள்வதில்லை. பெண் கொள்ளும் ஆசை, உழைப்பு, தன்னலம் எல்லாமே ஆணுக்கானது.

நல்ல கல்வியும், பலபேர் மத்தியில் பேசவும் பழகவுமான துணிச்சலும், உடையைத் தேர்வு செய்வதில் சுதந்திரமும் கொண்ட பெண்களை சினிமா அங்கீகரிக்கவில்லை. குனிந்த தலையோடு அச்சம் நிரம்பிய பெண்ணாகவும், புடவை அணிந்தவளாகவும் உள்ள பெண்களைக் குடும்பப் பெண்களாகவும், பண்பாட்டிற்கு உகந்த பெண்களாகவும் காட்டுகின்றனர். பெண்ணை ஒருபுறம் பண்பாட்டின் நாயகியாகவும், மறுபுறம் பண்டமாகவும் பார்க்கும் உலகமய இந்துத்துவச் சூழலின் அங்கம்தான், கதையமைப்பில் ஆண்பெண் போட்டியை உருவாக்கி, ஆணே இறுதியில் வெற்றி பெறுவதாக படத்தை முடிப்பது. ஆணின் வெற்றிக்கு பெண்மீது சுமத்தப்பட்டுள்ள கற்பு, மானம், பண்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்வது இவர்களின் திரையுலக நியாயம்.

சுயமயாதை இயக்கத்தின்போது பெரியார் அவர்களால் பெண்களின் உரிமை குறித்து மிகத் தீவிரமான கருத்துக்கள் பேசப்பட்டன. கற்பை மறுத்த பெரியாரைத் தலைவராக அறிவித்த திமுக தமிழ்க்கற்பை கண்ணகியின் பேரில் வலியுறுத்தியது. 1990களில் நிலப்பிரபுத்துவச் சாயல்கொண்ட நாட்டாமை வகையறாப் படங்களில் பெண்ணை நோக்கி குடும்பம் குறித்த உபதேசங்கள் ஏராளம்.

பெண்ணின் பார்வையில் சொல்லப்பட்ட படமோ, பெண்ணை மையப்படுத்திய கதையோ, பெண்களால் எடுக்கப்பட்ட படமோ இதுவரையிலும் உருவாகவில்லை. பெண்ணை நாயகியாக்கிய சில படங்கள்... மிகுபுனைவைக் கூறிய படங்களாகவே இருக்கின்றன. இவையெல்லாம் விதிவிலக்குகளாகக் கூடச் சொல்ல முடியாத அளவிற்கு மிகவும் குறைவாகும். சமூகத்தின் அடிப்படையான சிக்கல்கள் மீது விமர்சனப்பார்வை உருவாக்கப்படாத பட்சத்தில் நிலவும் சொல்லாடல்கள் அனைத்தும் அதிகாரத்திற்கான பிறிதொரு தயாரிப்பாகவே இருக்கும்.

தமிழ்ச் சமூகம் எவ்வாறு இயங்க நினைக்கிறதோ அம்மனநிலைக்கு ஏற்பவே படங்கள் வெளியாகி வருகின்றன. கடவுளை மறுத்து பகுத்தறிவை நிரப்பிய இடத்தில் சினிமா எனும் மூடநம்பிக்கை நிரம்பி விட்டது. கடவுளின் இடத்தைக் கதாநாயகன் எடுத்துக் கொண்டு அறிவு மறுப்பையும், மந்தைத்தனத்தையும் ஊட்டுகிறான். இப்போது தமிழ்ச் சமூகம் சினிமா மயமாகி விட்டது. சினிமாவில் ஏதாவது இருந்தால் தானே சமூகத்தில் பிரதிபலிக்கும். சட்டியிலும் இல்லை-அகப்பையிலும் இல்லை அவ்வளவுதான்.
நன்றி : “புதிய காற்று''


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com